Saturday 24 July 2010

கோட்டு சூட்டு மீடியாவும்... கூடவே கோமணம் கிழிந்த தமிழனும்




மீடியா... அதாங்க ஊடகம்... தமிழர்களின் புரிதலுக்கு ஒரு வடிகால்.

எண்பதுகள் வரை எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

அன்று நமக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களில் 'இலங்கை வானொலி' முன்னணியில் இருந்தது. பகல் முழுவதும் திரை இசைப் பாடல்கள். புதிர் போட்டி. பாட்டுக்குப் பாட்டு, போன்ற நல்ல நிகழ்ச்சிகள்..

சாகுல் ஹமீது, ராஜா போன்றவர்கள் கலக்கிக் கொண்டிருந்த நாட்கள்.

கொடுமையிலும் கொடுமையாக வானொலிப் பெட்டிக்குக்கூட 'லைசென்சு' இருந்த காலம்.

கிரிக்கெட் வர்ணனை வானொலியில் கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது.

இளையராஜாவின் இசையில் தரமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. கிராமங்கள் தோறும் முளைத்திருந்த டூரிங் டாக்கீசுகள். நூறு நாள் இருநூறு நாள் ஓடும் திரைப் படங்கள் வெளி வந்து கொண்டிருந்த காலம்.


கொலை கொள்ளை வெட்டு குத்து செய்திகளுக்கு தின தந்தி...

எம்ஜியாரின் புகழ் பாடும் தின மலர்..

நல்ல தலையங்கம் வெளியிடும் தின மணி.

கந்தசாமியின் துணையால் வை கோ வின் புகழ் பாடும் தினகரன்.. எல்லாம் இருந்தன.

இடையில் வானொலிகளுக்கு லைசென்சு ரத்து செய்யப்பட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு வரி குறைப்பு... பலனாக புற்றீசல் போல் புதிய புதிய தொலைக் காட்சி தயாரிப்பு நிறுவனங்கள். தாமதிக்காமல் தூர்தர்ஷன் துவங்கிய ரிலே சென்டர்கள்.



அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளின் மொட்டை மாடிகளில் அலுமினிய ஆண்டனாக்கள் ஆக்கிரமிக்கத் துவங்கின.



முதல் முறையாக தமிழர்கள் தொலைக்காட்சியில் தமிழ் செய்திகள் கேட்கத் துவங்கினார்கள்.

'ஷோபனா ரவி' என்பவர், இழுத்துப் போர்த்திய சேலை. சீரியசான முகம், தொடர்ச்சியாக செய்திகள் வாசித்து வந்தார். அவருக்கு அப்போதே பெண்கள் ரசிக கூட்டம் இருந்தது. 'பாத்திமா பாபு' என்பவரும் வாசித்து வந்தார்.

வெள்ளிக்கிழமை... ஒலியும் ஒளியும் , சனிக்கிழமை... ஹிந்தி திரைப்படம், ஞாயிறு.... தமிழ் திரைப்படம்

பொதிகை' கலக்கலாக முன்னேறியது...


ராமாயணம், மகாபாரதம், என மெகா சீரியல்கள்....
மொழி தெரியாவிட்டாலும், புரிந்து கொள்ளும் திறனை தமிழன் பெற்ற பொற்காலங்கள்.

'விழுதுகள்' போன்ற சீரியல்களை, பகலில் பொறுமையாக பார்க்க நம் தாய்க்குலங்கள் பழகிக் கொண்டிருந்தனர்,

மக்கள் பொறுமையாக, உணர்ச்சி வசத்துடன் காணத் துவங்கினர்.

இந்த மூன்று நாட்களில் மாலைப் பொழுதுகளில் ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். தொலைகாட்சி இருக்கும் வீட்டில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் கூடி... திருவிழாக் கூட்டம் போல் இருக்கும்.

அப்போதெல்லாம் தொலைகாட்சி பெட்டி வைத்திருப்பவர்களுக்கு அது பெரும் 'தொல்லைக்காட்சிப் பெட்டியாகவே' இருக்கும்.

நிகழ்ச்சிகள் முடிந்ததும், கிளம்பும் கூட்டத்தின் முகத்தில், காசு கொடுக்காமல், இலவசமாக ஒரு திரைப்படம் முதன் முதலில் பார்த்த பெருமிதம் இருக்கும்.

அதுவரை, இந்த மூன்று நாட்களில் எந்தப் படம் போட்டாலும், ஹவுஸ் புல் ஆக ஓடிக்கொண்டிருந்து, நல்ல முறையில் கல்லாக் கட்டிக் கொண்டிருந்த டூரிங் டாக்கீசுகளுக்கு எம தர்மனாக பொதிகை மாறியது.

ஒரு கதவு அடைந்தால் மறு கதவு துறக்கும் என்பது போல், விழி பிதுங்கி நின்ற இவர்களுக்கு ஆத்ம ரக்ஷகனாக வந்தன அந்தக் கால கட்டத்தில் வெளியான உலகத்தரம் வாய்ந்த மலையாளத் திரைப்படங்கள்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் என்ற புண்ணியவான் 'பாவம் கொடூரன்,' பீமன், வாழு வாழ விடு, மாமனாரின் தாகம், போன்ற 'நல்ல' படங்களை வெளியிட்டார்.

மாற்று வழியாக இவர்கள், சனி ஞாயிறு பகல் காட்சிகளாக (ஆண்களுக்கு மட்டும்) இந்தப் படங்களை திரையிட்டு கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அன்று சைக்கிள்கள்தான் சாமான்யனின் வாகனம். மதியக் காட்சிக்கு ஊரில் உள்ள மொத்த சைக்கிள்களும் டூரிங் டாக்கீசில்தான் நின்று கொண்டிருக்கும்.
மற்ற நாட்களில் டிக்கெட் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என்றால், இந்த நாட்களில்
இரண்டு ரூபாய் மற்றும் மூன்று ரூபாய்.

ஜாதி, மத, இன, நிற, மொழி, கட்சி மற்றும் வயது பேதமின்றி சிறுவர் முதல் பல் போன முதியவர் வரை
வருவார்கள். மொத்தமே படம் ஒரு மணி நேரம் ஓடும். இதில் அதிகபட்சம் இருபது நிமிடம் மற்ற காட்சிகள் ஓடும்.


படம் துவங்கியதும் பிரேம் நசீர் '
ரிதுமதியாய் தெளி மானம், மதுமதியாய் நின் ரூபம் ' என்று பாட, சீமா 'ப்ரனமாயி என் நாணம்' என்று பாடுவார். படத்தின் பிரிண்ட் பாடாவதியாயிருக்கும் .

திடீரென திரையின் இடது வசம் ஒரு சிகப்பு விளக்கு மின்னி மின்னி எரியும்.
அனைவரும் உஷாராகி விடுவார்கள். எங்கும் நிசப்தம். படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத இசை, சீன் எல்லாம் வரும். பத்து நிமிடம் ஓடும்.

உடனே இடைவேளை. மற்ற படங்களுக்கு இடைவேளை ஐந்து நிமிடம் என்றால் இதற்கு மட்டும் பதினைந்து நிமிடங்கள். காண்டீனில் உள்ள சிகரட், பீடி, முறுக்கு, தட்டை, கடலை மிட்டாய் எல்லாம் காலியாக வேண்டுமே. எதிர்பார்த்தபடி எல்லாம் காலியாகும், உடன் படம் துவங்கி விடும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, மகன், பேரன், அனைவரையும் இங்கு காணலாம். முன் வரிசையில் இருக்கும் அப்பா எங்கே தன்னைப் பார்த்து விடுவாரோ என்று மகன் தலையில் வெள்ளைத் துண்டைப் போட்டு இரண்டாம் வரிசையில் இருப்பார். இவரது மகன் மூன்றாம் வரிசையில் இருந்து கொண்டு, எங்கே இந்த ரெண்டு பெருசுகளும் நம்மைப் பார்த்து விடுமோ என்று டென்சனில் இருப்பார்.

மீண்டும் படம் துவங்கியதும் சிகப்பு விளக்கு எரிந்து அணைந்தவுடன், அவசரத்தில் ஒவ்வொருவராக நழுவ ஆரம்பிப்பார்கள்.

இப்படியாக கொஞ்ச காலத்திற்கு டூரிங் டாக்கீசுகளுக்கு சுக்ர திசை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் ஒரு ஆப்பு வந்தது.. அது பின்னால்.

இந்தக் கால கட்டங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தெற்காசியாவில் உள்ள 'புன்னகை மன்னன்களிடம்' இருந்து எப்படி பணம் கறக்கலாம் என்று சிந்தித்த போது உருவானதுதான் இது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்த சாத்தான் மெது மெதுவாக ஊடுருவ ஆரம்பித்தது. இந்தக் கால கட்டங்களில் தான் மன் மாமன் சங்கும், தமிழ் நாட்டு பீதாம்பரமும் 'உலக மயமாக்கல்' என்ற பெயரில் ஒவ்வொரு இந்தியனின் வேட்டியையும் உருவ ஆரம்பித்தனர்.

பெப்சி, கோலா போன்ற நச்சுக் கொல்லிகள் எல்லாம் உள்ளே புகுந்தன.
அதுவரை நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருந்த சிறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும், மீண்டும் முளைக்காதபடி கான்கிரீட் கல்லறைகளில் மூடப்பட்டன.

தமிழின் முதல் தனியார் தொலைக்காட்சியாக 'கன்' டிவி பிறந்தது. தமிழும், கூடவே தமிழனும் வளர ஆரம்பித்தன, ஆரம்பித்தனர்.
இதன் துவக்கம் காரணமாக வை கோ தப்பித்தார்.

'வணக்க்க்கம்ம்ம்ம்' என்று தமிழை புதுமையாக உச்சரித்து நம்மை அதிர வைத்தார் நிர்மலா பெரியசாமி.

டை கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு 'ஜேம்ஸ் வசந்தன்' டாப் டென்னில் நடிகர்களை வாரிக் கொண்டிருந்தார்.

'ஏன் இப்படி கடுமையாக விமர்சிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, 'மண்டபத்தில் எழுதிக்கொடுப்பதை வாசிப்பது தான் என் வேலை' என்றார்.

ரெகோ என்பவர் 'ஜோடிப்பொருத்தம்' நிகழ்ச்சியை அருமையாக நடத்திக் கொண்டிருந்தார். இப்போது அவரைக் காணவில்லை.

பெப்சி வந்த போது கூடவே பெப்சி உமாவும் வந்தார். தமிழ் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டு அளப்பற்கரியது.

பல புதிய தமிழ் வார்த்தைகளை வடிவங்களை இவர் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதில் மனங்கவர்ந்த ஒன்று இது.

தொலைபேசி நேரடி ஒளிபரப்பில் பெண்களிடம் பேசும்போது, உங்களுக்கு எத்தனை குழைந்தைகள் என்று கேட்கவே மாட்டார். 'எவ்வளவு குழைந்தைகள் என்றுதான் கேட்பார்.

அதுவரை அவ்வளவாக பிரபலமாகாத ஒரு இதழ், இதன் விளம்பரங்கள் தமிழர்களின் மனம் கவர்ந்தது.

'வாங்கி விட்டீர்களா, இந்த வாரம்,' என் ஒரு பெண் முக்கும் குரலில் முக்கி முக்கி பேசி நம்மை மூக்கில் விரல் வைக்கச் செய்தார்.

இதுபோல் பல நிகழ்ச்சிகளிலும் தமிழ் வளர்ந்தது.
அதுவரை பொதிகையில் புடவை அணிந்த பெண்களைக் கண்டு ரசித்த தமிழன், நவீன உடைகளில் நவீன தமிழ் பேசும் இளம் பெண்களைக் காண ஆரம்பித்தான்.

'உங்கள்கு இந்தப் படம் அவ்ளவு பெருசாப் பிடிக்குமா.. நைஸ்'
போன்ற குயில் குரல்கள் தமிழனுக்குப் பிடித்துப் போனது.

அடுத்துராஜா டி வி, இவர்களுக்கு ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகள் ஒன்றும் தேவை இல்லை... வீடியோ கடையில் இருக்கும் பழைய வீடியோ காசட்டுகளை தூசு தட்டி அத்தப் பலசல் படங்களைத் தொடர்ந்து போட்டு பெருசுகளை மகிழ வைத்தார்கள்.

ஆளாளுக்கு ஒன்று எனும்போது நமக்கும் ஒன்று வேண்டுமே என்று அம்மாவும் ஒன்று துவங்கினார்.

சும்மா இருப்பாரா சாராய மன்னன். அவரும் ஆரம்பித்தார் 'அஜய்' டி வி.

கடைசி மூன்றும் சரியாகப் போணியாகவில்லை.

அம்மாவின் டி வி மூடப்பட்டு கடையடைக்கப்பட்டாலும், பீனிக்ஸ் பறவை போல் புத்துயிர் கொண்டு திரும்பி வந்தது.

சாராய மன்னன் இந்தப் பூதத்திடம் சரணடைந்து விட்டார்.

இந்தக் கால கட்டங்கள் நல்ல முறையில் கல்லாக் கட்டிக்கொண்டிருந்த டூரிங் டாக்கீசுகள் ஒவ்வொன்றாக மூடுவிழா நடத்த ஆரம்பித்தன .

முக்கிய காரணம் ஒரு பிரபல சேனலில் , நடு நிசிக்கு ஒளிபரப்பான 'மிட் நைட் மசாலா' எனும் நிகழ்ச்சி.

தமிழ் திரைப்படங்களில் இது வரை நாம் பார்த்திராத, பார்க்க விட்டுப் போன மசாலாப் பாடல்களை ஒளிபரப்பி கலைச்சேவை தொடர்ந்தது.

பகலில் ஒளிபரப்பினால், சிறுவர்கள் சீரழிந்து விடுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இந்தச் சேவை இரவில் வழங்கப்பட்டது. நாளடைவில் நிறுத்தப்பட்டது. ஒரு வேளை தமிழக மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு பேருதவியாக இந்த நிகழ்ச்சி இருந்திருக்கலாம் என்பதாலோ என்னவோ??

குவிந்து கிடந்த ஆங்கில சேனல்கள். தமிழன் பார்க்காததை எல்லாம் பார்க்க ஆரம்பித்தான். 'வி' சேனல், ஸ்டார் மொவீஸ், ஹெச் பி போன்ற நல்ல சேனல்களில் 'தாராள மயமாக்கல் சேவை' தொடர்ந்து கொண்டிருந்தது.

தமிழனின் முற்போக்கு சிந்தனை இங்கு நன்றாக வேலை செய்தது.
'வி' சேனலில் வரும் பெண்கள் எல்லாம் ஏழைகள். காசிருந்தால் நல்ல உடைகள் உடுக்கலாமே...காசில்லாத காரணத்தினால்தான்
சிங்கள் பீஸ், டபுள் பீஸ் உடைகளில் வருகின்றார்கள் என்று சிந்தித்து, பரிதாபப்பட்டு ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

இப்படியாக ஒரு பதினைந்து வருடங்கள் ஓடி விட்டது.

இந்தக் கால அளவில் நம் ஊடகங்கள் எண்ணிக்கையில் பெருகி விட்டன.

ஆனால் தரத்தில் உயர்ந்துள்ளனவா என்பதுதான் கேள்வி..

எந்த ஒரு சேனலாவது தமிழனின் ஏதாவது ஒரு பிரச்சனைக்காகக் கொடி பிடித்த சரித்திரம் இருக்கின்றதா??

இலங்கைத் தமிழர் இன்னல், ராமேஸ்வரம் மீனவர்கள் படும் துயரம், அரசியல் அராஜகம், இது போன்ற பிரச்சனைகளில் பெரும்பான்மையான இந்தச் சேனல்கள் வகித்த பங்கு நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே???

முன்னணி சேனல்கள் கட்சி சார்ந்த சேனல்களாக மாறி விட்டன.
அஜய் டி வி, இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள பிரபல பின் நவீனத்துவ எழுத்தாளரிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.

ராஜா டி வி கணக்கில் சேராது.

தமிழ் நாட்டுக்குள்ளேயே புழங்கும் சில குட்டி சேனல்கள் உள்ளன.

இவை எல்லாம் இலவச சேனல்கள். ஒரு ரெசிவெர், டிஷ் இருந்தால் இன்சாட் ஒன் சி சாட்டிலைட்டை டியூன் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

இவைகளில் வெளியாகும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால், கருமமே, காந்தி நமக்கெல்லாம் ஏன் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று தோன்றும்???

தமிழனை, இன, மதம், ஜாதி, ரீதியில் பிரிப்பதில் இந்தச் சேனல்கள் முக்கிய பங்காற்றுகின்றனவோ என்ற ஐயப்பாடு இன்று சாதாரண மனிதனின் உள்ளத்தில் கூட எழத் தொடங்கி விட்டது.



தமிழனுக்கும், தமிழ் நாட்டிற்கும் மிகப் பெரிய பெருமை ஒன்று ஊடகத்துறையில் இருக்கின்றது. உலகிலேயே அதிகமாக அரசியல் கட்சிகள்/அமைப்புகள் ஆளுக்கொரு சேனல் வைத்திருப்பது இங்கு தான்.


பெரும்பாலான சேனல்களும் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட அமைப்புகளை ஆதரிப்பவை.

புகழ் பெற்ற ஒரு சேனல் வெளி நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமானது.

நகர்ப்புறங்களில் அதிகம் பார்க்கப்படும் முன்னணி சேனல்களில் பயனுள்ள எந்த நிகழ்ச்சியும் பார்ப்பது அரிது.

கிராமப் புறங்களில் அதிகம் பார்க்கப்படும் இலவச சேனல்களில் பயனில்லா நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பது எளிது.

சில சேனல்களில் நடக்கும் 'கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ, இவைகளைப் பார்த்தாலே..... வடிவேலு சொன்னது போல் வாயில் நன்றாக வருகின்றது...


இந்த நிகழ்ச்சிகளில் நடக்கும் கூத்துக்கள், நடிப்பு, வியாபார உக்தி, பார்வையாளர்களை ஏமாற்றி பணம் உண்டாக்கும் குறுக்கு தந்திரம்,..... எல்லாமே அமெரிக்கர்களை எளிதாக ஏமாற்றி கோடிகள் குவிக்கும் இவர் கூட இவர்களின் முன்பு தோற்றுப்போவார் என்று எண்ணத் தோன்றும்.

இந்த நிகழ்ச்சிகளில் நடக்கும் சில கோமாளித்தனங்களை இங்கு பாருங்கள்.


ஆஸ்கார் அவார்டு நிச்சயமா இவனுகளுக்குத்தான்

இந்தப் பூனையும் பால் குடிக்குமா???



13 comments:

ஜீவன்பென்னி said...

முழுசா படித்தாகிவிட்டது தொடுப்புகளில் என்ன இருக்குன்னு பார்த்துவிட்டு வருகிறேன்.

ஜீவன்பென்னி said...

டீவி பாக்குறது ரொம்ப குறைவுண்ணே. இத கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் பாக்குறேன். காணக்கிடைக்கா காட்சிகளக் காட்டி கண் குளிர வைச்சுட்டீங்க. நன்றிகள். இப்போ இதவிட பெரிய கூத்துக்கள் நடக்குதுபோலண்ணே.

ஜீவன்பென்னி said...

ஒரு விசயம்னே எங்க வீட்ல கடந்த 25 வருசமா ஒன்லி தூர்தர்ஷன்தான். ஒரு வித்தியாசம் VHF ஆண்டனாலேர்ந்து UHF ஆண்டனாவுக்கு மாறிட்டாங்க.

Bibiliobibuli said...

நீண்ட நாட்களுக்கு பின் இன்று வாய்விட்டு சிரித்தேன், நன்றி. சிம்பு மூக்கை உறிஞ்சுவதும், அதுக்கு சில aunty க்கள் துடிப்பதும் செம காமெடி. :)

Jey said...

30 வருட தொழில்நுட்ப மாற்றத்தையும்... 30 வரசமாக மாறாத மீடியாக்களின் தரத்தையும் அழகாகத்தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.

தோழி said...

தொகுப்பு அருமை... சிறப்பாக இருக்கின்றது..

ஒரே ஒரு சந்தேகம் மட்டும்...

இவ்ளோ நிகழ்ச்சியும் பார்த்தீங்களா..???

நீச்சல்காரன் said...

நல்லா இருக்குதண்ணே

'பரிவை' சே.குமார் said...

தொகுப்பு அருமை...

Unknown said...

ஒளியும் ஒலியும் பத்தி ஒரு வரி சொல்லலையே? :))

Anonymous said...

மக்கள் தொலைக்காட்ச்சி ஒரு கட்சி சார்ந்து இருந்தாலும்,அது அந்த கட்சியின் செய்திகளை பிரதான படுத்த வில்லை.மற்றப்படி அது வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் தரமாக இருக்கின்றன

lcnathan said...

MAKKAL TV,VIJAY,ZEE TAMIL TV KKAL NANTRAAKA SEYAL PADUKINTRANA. IPPOTHUM POTHIKAI TV NIKAZHCHKAL AAPAASAM ILLAMAL IRUKKIRATHU

MR.BOO said...

Thanks for your visit and comments
ஜீவன்பென்னி
Rathi
Jey
பிரியமுடன் பிரபு
தோழி
நீச்சல்காரன்
சே.குமார்
சுல்தான்
mkrpost
lcnathan

பா ஸ்ரீராம் said...

நன்றே சொன்னீர்கள்.மக்கள் தொலைக்காட்சி பணம் பண்ணுவதை குறியாக கொள்ளாமல் தமிழன் பண்பாடு, விவசாயிகளின் அருமை இவற்றை கண்முன் நிறுத்துகிறார்கள்.குடியையும், புகையையும், லாகிரி வஸ்துக்களையும் மறைமுகமாக கூட காண்பிக்கமாட்டார்கள்.ஆனால் அதிகம் பேர் இதை கலாச்சார சீரழிவு காரணமாக பார்க்க விரும்புவதில்லை. ஊருக்கு தான் உபதேசம் நம் மக்களுக்கு.

Post a Comment

உங்க மனசுல என்ன தோணுதுண்ணு தயங்காமச் சொல்லுங்க!!!