மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணி நிமித்தமாக சுற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன்.
இப்போது இங்கு உச்ச கட்ட வெப்ப நிலை... வெளியில் இறங்கி பத்தடி கூட நடக்க முடியாது.. சுருண்டு விழுந்து விடுவோம்...
A/C இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.
ஆனால் காலையில் ஏழு மணிக்கே எழுந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை பரந்த அளவில் பார்க்கலாம்.
நீலம், சிகப்பு , மஞ்சள் கலரில் சீருடை அணிந்து கட்டிடப் பணிகளில் ஈடுபடும் இவர்களின் நிலைமையை நேரில் பார்த்தால் நமக்கே கண்கள் கலங்கும். இதில் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சம்பளம் மிகக் குறைவு, அதுவும் மாதா மாதம் ஒழுங்காகக் கிடைக்காது. ஏன் என்று கேள்வி கேட்கவும் முடியாது. கேட்டால் அடி உதை...சரியான உணவு கிடைக்காது... எட்டு முதல் பத்து பேர்கள் சேர்ந்து தங்கும் இருப்பிட வசதி. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்தபடி அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
(அதிலும் பெரும்பாலானோர் இந்தக் குறைந்த ஊதியத்தையும் சேமிப்பதில்லை.
முக்கியமான மூன்று வழிகளில் இவர்களது சேமிப்பு கரைந்து விடும்.
இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.
துக்கத்தை மறக்க இதை விட்டால் இவர்களுக்கு வேறு நிவாரணம் இல்லை என்பதே உண்மை.
டெலிபோன் கார்டுகள்: சிலர் கணக்கில்லாமல் மணிக்கணக்கில் சொந்த ஊருக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள்.
குடிப்பழக்கம் : வெளி நாட்டு மது வகைகள் இங்கு மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். இதை கள்ளத்தனமாக விற்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது.
கடன் வசதி உண்டு. சம்பள தினம் வந்து சரியாகப் பணத்தை வாங்கிச் செல்வார்கள்.
விபச்சாரம் (என்ற அபச்சாரம்) : பெண் வாணிபம் இங்கெல்லாம் வழியோரக் காட்சிகள். பல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இலகுவாக மலிவு விலையில்...உள்ள அவலம்...)
பெரும்பாலானோர் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள்... இவர்களுக்கு நீதி கிடைக்க இங்கு எந்த சக்தியும் உதவி செய்யாது..
இங்குள்ள சிறைச் சாலைகளில் நாட் கணக்கல்ல... மாதக் கணக்கல்ல... வருடக் கணக்காக... வாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் ஏராளம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சோகங்கள்.. இவர்களைப் பற்றி இங்கு எந்த இந்திய அமைப்பிற்கும் கவலை கிடையாது.
உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தூதரகங்கள் இருக்கின்றன...
அவை அனைத்துமே தத்தமது நாட்டின் சொந்தக் குடிமக்களுக்கு ஏதாவது பிரசனை என்றால் முன்னுரிமை கொடுத்து உதவுகின்றன..
நமது இந்தியாவிற்கும் இருக்கின்றன...உலகம் முழுவதும்..
ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த உதவியும் கிடைக்காது.
கோட்டும் சூட்டும் அணிந்து இவர்களை பெரும் விழாக்களில் மட்டுமே காண முடியும்.
உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இவர்களை உங்களால் சாதாரணமாக அணுக முடியாது.
இந்தச் சூழ்நிலையில் நாம் அலசிப் பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.
வெறும் 7000 ரூபாய் சம்பளத்திற்காக ஒரு லட்சத்திற்கும் மேல் ஏஜெண்டுகளுக்கு தாரை வார்த்து இந்தக் கொடுமையை அனுபவிக்க உங்களுக்கு என்ன விதி?
புறப்படுவதற்கு முன்பே விசா, நிறுவனம், சொன்ன வேலைக்கான உறுதி இவைகளைப் பற்றி நன்கு விசாரிக்காமல் விமானத்தில் ஏற உங்களுக்கு என்ன அவசரம்?
வீடு, குடும்பம், மனைவி, மக்கள் அனைத்தையும் விட்டு இங்கு வந்து கோடிகளா சம்பாதிக்கப் போகிறீர்கள்?
அனல் கொதிக்கும் இந்த வெப்பத்தில் வேலை செய்து உடல் நலம் சீரழிவதை விட உள்ளூரில் இந்தப் பணத்தை உங்களால் ஈட்ட முடியாதா?
இன்று நம் நாட்டில் ஒரு தொழிலாளியின் தினசரி ஊதியம் குறைந்த பட்சம் 300 ரூபாய்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
நமக்கு உதவ இங்கு யாரும் இல்லை.
சொந்த முயற்சி... கடின உழைப்பு.. கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை இருந்தால் ஒழிய இங்கு தாக்குப் பிடிப்பது மிகக் கடினம்.
தகுந்த தகுதி, கூடிய அனுபவம், தன்னம்பிக்கை இவை இருந்தால் மட்டுமே வெளி நாட்டு வேலை எனும் ஆசையைக் கனவு காணுங்கள்... தயவு செய்து...
தொடர்புடைய பதிவுகள்