Tuesday, 29 June 2010

48 டிகிரியும் கருகும் கனவுகளும்மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணி நிமித்தமாக சுற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன்.

இப்போது இங்கு உச்ச கட்ட வெப்ப நிலை... வெளியில் இறங்கி பத்தடி கூட நடக்க முடியாது.. சுருண்டு விழுந்து விடுவோம்...

A/C இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.

ஆனால் காலையில் ஏழு மணிக்கே எழுந்து வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை பரந்த அளவில் பார்க்கலாம்.

நீலம், சிகப்பு , மஞ்சள் கலரில் சீருடை அணிந்து கட்டிடப் பணிகளில் ஈடுபடும் இவர்களின் நிலைமையை நேரில் பார்த்தால் நமக்கே கண்கள் கலங்கும். இதில் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சம்பளம் மிகக் குறைவு, அதுவும் மாதா மாதம் ஒழுங்காகக் கிடைக்காது. ஏன் என்று கேள்வி கேட்கவும் முடியாது. கேட்டால் அடி உதை...சரியான உணவு கிடைக்காது... எட்டு முதல் பத்து பேர்கள் சேர்ந்து தங்கும் இருப்பிட வசதி. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்தபடி அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

(அதிலும் பெரும்பாலானோர் இந்தக் குறைந்த ஊதியத்தையும் சேமிப்பதில்லை.

முக்கியமான மூன்று வழிகளில் இவர்களது சேமிப்பு கரைந்து விடும்.
இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.
துக்கத்தை மறக்க இதை விட்டால் இவர்களுக்கு வேறு நிவாரணம் இல்லை என்பதே உண்மை.
டெலிபோன் கார்டுகள்: சிலர் கணக்கில்லாமல் மணிக்கணக்கில் சொந்த ஊருக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

குடிப்பழக்கம் : வெளி நாட்டு மது வகைகள் இங்கு மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும். இதை கள்ளத்தனமாக விற்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது.
கடன் வசதி உண்டு. சம்பள தினம் வந்து சரியாகப் பணத்தை வாங்கிச் செல்வார்கள்.
விபச்சாரம் (என்ற அபச்சாரம்) : பெண் வாணிபம் இங்கெல்லாம் வழியோரக் காட்சிகள். பல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இலகுவாக மலிவு விலையில்...உள்ள அவலம்...)

பெரும்பாலானோர் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள்... இவர்களுக்கு நீதி கிடைக்க இங்கு எந்த சக்தியும் உதவி செய்யாது..


இங்குள்ள சிறைச் சாலைகளில் நாட் கணக்கல்ல... மாதக் கணக்கல்ல... வருடக் கணக்காக... வாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் ஏராளம்.

ஒவ்வொருவருக்கும்
அவரவர் சோகங்கள்.. இவர்களைப் பற்றி இங்கு எந்த இந்திய அமைப்பிற்கும் கவலை கிடையாது.

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தூதரகங்கள் இருக்கின்றன...
அவை அனைத்துமே தத்தமது நாட்டின் சொந்தக் குடிமக்களுக்கு ஏதாவது பிரசனை என்றால் முன்னுரிமை கொடுத்து உதவுகின்றன..

நமது இந்தியாவிற்கும் இருக்கின்றன...உலகம் முழுவதும்..
ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த உதவியும் கிடைக்காது.
கோட்டும் சூட்டும் அணிந்து இவர்களை பெரும் விழாக்களில் மட்டுமே காண முடியும்.

உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இவர்களை உங்களால் சாதாரணமாக அணுக முடியாது.

இந்தச் சூழ்நிலையில் நாம் அலசிப் பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

வெறும் 7000 ரூபாய் சம்பளத்திற்காக ஒரு லட்சத்திற்கும் மேல் ஏஜெண்டுகளுக்கு தாரை வார்த்து இந்தக் கொடுமையை அனுபவிக்க உங்களுக்கு என்ன விதி?

புறப்படுவதற்கு முன்பே விசா, நிறுவனம், சொன்ன வேலைக்கான உறுதி இவைகளைப் பற்றி நன்கு விசாரிக்காமல் விமானத்தில் ஏற உங்களுக்கு என்ன அவசரம்?

வீடு, குடும்பம், மனைவி, மக்கள் அனைத்தையும் விட்டு இங்கு வந்து கோடிகளா சம்பாதிக்கப் போகிறீர்கள்?

அனல் கொதிக்கும் இந்த வெப்பத்தில் வேலை செய்து உடல் நலம் சீரழிவதை விட உள்ளூரில் இந்தப் பணத்தை உங்களால் ஈட்ட முடியாதா?

இன்று நம் நாட்டில் ஒரு தொழிலாளியின் தினசரி ஊதியம் குறைந்த பட்சம் 300 ரூபாய்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு உதவ இங்கு யாரும் இல்லை.

சொந்த முயற்சி... கடின உழைப்பு.. கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை இருந்தால் ஒழிய இங்கு தாக்குப் பிடிப்பது மிகக் கடினம்.

தகுந்த தகுதி, கூடிய அனுபவம், தன்னம்பிக்கை இவை இருந்தால் மட்டுமே வெளி நாட்டு வேலை எனும் ஆசையைக் கனவு காணுங்கள்... தயவு செய்து...


தொடர்புடைய பதிவுகள்

அம்மா எனும் ஒரு சொல்!

சுனிதா கிருஷ்ணன்

எங்கே செல்லும் இந்தப் பாதை

(19) திரா'விட'ப் பெத்தடினும் வளைகுடாத் தமிழர்களும்

கருகும் கனவுகள் !Wednesday, 23 June 2010

Oil Spill ... A hidden danger on Earth


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை..

இது வள்ளுவப் பெருந்தகை எழுதி வைத்த பொன்மொழி...

ஆனாலும் பொறுமைக்கும் ஒரு பொறுமை உண்டு அல்லவா??

அண்மைக்காலங்களில் தொடர்ந்து நிகழும் இயற்கைச் சீற்றங்களைக் காணும் போது............ (சுனாமிகளும்...நில நடுக்கங்களும்...எரிமலை வெடிப்புகளும்...)
மனிதன் இயற்கையோடு
காண்பித்து வரும் கொடூரங்களைக் கண்டு...
மனம் வெறுத்து இயற்கையே இன்று திருப்பித் தாக்குகின்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது...மாதக் கணக்கில் கசிந்து வரும் எண்ணெய்க் கசிவை நிறுத்த முடியாமல் அனைவரும் திணறும் போது..... முடிவாக இந்த முயற்சியில் இறங்கவிருக்கின்றார்கள் ...

தினமும் அவர்களது (கள்ளக்) கணக்கு படி சராசரியாக ஐயாயிரம் பேரல்கள் கசிகின்றது. ஆனால் உண்மையில் 25 ஆயிரம் பேரல்களுக்கும் மேல் கசிவதாக கணக்கு.

ரைசர்...எனப்படும் உடைந்து போன குழாய்களின் மூன்று துளைகள் வழியாக கடலுக்குக் கீழே ஐயாயிரம் அடி ஆழத்தில் அதி வேகத்தில் கசிந்து கொண்டிருக்கின்றது.

காங்கிரீட் கொண்டு கொட்டி துளைகளை அடைத்து விடுவோம் என்று வீராப்பு பேசியவர்கள் இன்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இதே நம் இந்தியாவில் என்றால் குறைந்தது ஒரு ஊர்வலம் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று அரசியல்வாதிகள்க்கு கொண்டாட்டம்...பொது மக்களுக்கு திண்டாட்டம் ஆகியிருக்கும்.

இவ்வளவு பெரிய இயற்கைப் பேரழிவு....

ஆனால் எங்கு பார்த்தாலும் மௌனம்..

பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பண முதலைக்கு முன்பு வாய் திறக்க ஒபாமாவிற்கு கூட சின்ன தயக்கம்.

எண்ணெய் கசிவு அமெரிக்க தீரத்தைத் தொட்ட பின்னர்தான் இவரே சிறிதாக வாய் துறக்கின்றார்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

கசிவு...கசியும் வரை கசியட்டும்...

இதற்கிடையே... எரிகின்ற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபம் என்ற கணக்கில் 'சுத்தம் செய்கின்றேன் என்ற பெயரில் பல பண முதலைகளும் பில்லியன் கணக்கில் விழுங்க ஆரம்பித்து விட்டனர்.

சாதாரண முறையை விட மூன்று மடங்கு எண்ணைய் உறிஞ்சக் கூடிய தேங்காய் நார்கள் கொண்டு உருவாக்கிய கார்பெட் முறை என்னிடம் உள்ளது என்று ஒரு இந்தியர் கூவிக் கொண்டிருக்கிறார்.

கேட்பார் யாருமில்லை.

கடல் வாழ் உயிரினங்களுக்கு பேச வாய் இல்லை அல்லவா??
எண்ணையை விழுங்கி விழுங்கி சுவாசம் முட்டி அவைகள் இறப்பதைப் பற்றி யாருக்கு என்ன கவலை????


கொடுமைகளையும் கூத்தாட்டங்களையும் பார்த்துப் பார்த்து....நம் கையாலாகாத்தனத்தை நினைத்து நினைத்து நமக்கே நம் மீது வெறுப்பு வருகின்றது....

கூடுதல் செய்திகள்...

இது நம்ம நினெச்ச மாதிரி இல்ல மாமோய்


இவ்வளவு காசு போனாலும் பி பி க்கு தூசு


இத இப்படியே விட்டோம்னா...நம்ம கதி

இப்ப இங்க ஒரு மீட்டிங் நடக்குது.. என்னான்னு பார்ப்போம்.இந்தக் கசிவு எப்படியெல்லாம் பரவுகின்றது என்பதை இன்றைய நாள் நிலவரப்படி தெரிந்து கொள்ள (கொல்ல??)


இதைப் பற்றி இங்கு இப்போது எழுதி புதிதாக புல் ஒன்றும் முளைக்கப் போவதில்லை... எல்லாம் செகுடன் காதில் ஊதிய சங்கு தான்...
சரி சரி நமக்கென்ன கவலை.

செம்மொழி மாநாடு...ராவணன்...பதிவர் சண்டை...படு மொக்கை... பார்ப்பனீயம்...விஜய் டிவி ஸ்டார் சிங்கர் ... அது இது என நமக்கு எழுத ஏராளம் இருக்கும் போது.... அடப் போங்கப்பா????

It's been a while since heavy rain caused massive floods in some parts of Europe.

You'll see some of the countries that suffer from it inside the post.


இயற்கை சொல்லாமல் சொல்கின்றது...

என் வயிற்றைக் கீறி நீ எண்ணைய் எடுத்தால் உன் வயிற்றில் நான் அடிப்பேன்...