Saturday, 24 July 2010

கோட்டு சூட்டு மீடியாவும்... கூடவே கோமணம் கிழிந்த தமிழனும்
மீடியா... அதாங்க ஊடகம்... தமிழர்களின் புரிதலுக்கு ஒரு வடிகால்.

எண்பதுகள் வரை எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

அன்று நமக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களில் 'இலங்கை வானொலி' முன்னணியில் இருந்தது. பகல் முழுவதும் திரை இசைப் பாடல்கள். புதிர் போட்டி. பாட்டுக்குப் பாட்டு, போன்ற நல்ல நிகழ்ச்சிகள்..

சாகுல் ஹமீது, ராஜா போன்றவர்கள் கலக்கிக் கொண்டிருந்த நாட்கள்.

கொடுமையிலும் கொடுமையாக வானொலிப் பெட்டிக்குக்கூட 'லைசென்சு' இருந்த காலம்.

கிரிக்கெட் வர்ணனை வானொலியில் கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது.

இளையராஜாவின் இசையில் தரமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. கிராமங்கள் தோறும் முளைத்திருந்த டூரிங் டாக்கீசுகள். நூறு நாள் இருநூறு நாள் ஓடும் திரைப் படங்கள் வெளி வந்து கொண்டிருந்த காலம்.


கொலை கொள்ளை வெட்டு குத்து செய்திகளுக்கு தின தந்தி...

எம்ஜியாரின் புகழ் பாடும் தின மலர்..

நல்ல தலையங்கம் வெளியிடும் தின மணி.

கந்தசாமியின் துணையால் வை கோ வின் புகழ் பாடும் தினகரன்.. எல்லாம் இருந்தன.

இடையில் வானொலிகளுக்கு லைசென்சு ரத்து செய்யப்பட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு வரி குறைப்பு... பலனாக புற்றீசல் போல் புதிய புதிய தொலைக் காட்சி தயாரிப்பு நிறுவனங்கள். தாமதிக்காமல் தூர்தர்ஷன் துவங்கிய ரிலே சென்டர்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளின் மொட்டை மாடிகளில் அலுமினிய ஆண்டனாக்கள் ஆக்கிரமிக்கத் துவங்கின.முதல் முறையாக தமிழர்கள் தொலைக்காட்சியில் தமிழ் செய்திகள் கேட்கத் துவங்கினார்கள்.

'ஷோபனா ரவி' என்பவர், இழுத்துப் போர்த்திய சேலை. சீரியசான முகம், தொடர்ச்சியாக செய்திகள் வாசித்து வந்தார். அவருக்கு அப்போதே பெண்கள் ரசிக கூட்டம் இருந்தது. 'பாத்திமா பாபு' என்பவரும் வாசித்து வந்தார்.

வெள்ளிக்கிழமை... ஒலியும் ஒளியும் , சனிக்கிழமை... ஹிந்தி திரைப்படம், ஞாயிறு.... தமிழ் திரைப்படம்

பொதிகை' கலக்கலாக முன்னேறியது...


ராமாயணம், மகாபாரதம், என மெகா சீரியல்கள்....
மொழி தெரியாவிட்டாலும், புரிந்து கொள்ளும் திறனை தமிழன் பெற்ற பொற்காலங்கள்.

'விழுதுகள்' போன்ற சீரியல்களை, பகலில் பொறுமையாக பார்க்க நம் தாய்க்குலங்கள் பழகிக் கொண்டிருந்தனர்,

மக்கள் பொறுமையாக, உணர்ச்சி வசத்துடன் காணத் துவங்கினர்.

இந்த மூன்று நாட்களில் மாலைப் பொழுதுகளில் ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். தொலைகாட்சி இருக்கும் வீட்டில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் கூடி... திருவிழாக் கூட்டம் போல் இருக்கும்.

அப்போதெல்லாம் தொலைகாட்சி பெட்டி வைத்திருப்பவர்களுக்கு அது பெரும் 'தொல்லைக்காட்சிப் பெட்டியாகவே' இருக்கும்.

நிகழ்ச்சிகள் முடிந்ததும், கிளம்பும் கூட்டத்தின் முகத்தில், காசு கொடுக்காமல், இலவசமாக ஒரு திரைப்படம் முதன் முதலில் பார்த்த பெருமிதம் இருக்கும்.

அதுவரை, இந்த மூன்று நாட்களில் எந்தப் படம் போட்டாலும், ஹவுஸ் புல் ஆக ஓடிக்கொண்டிருந்து, நல்ல முறையில் கல்லாக் கட்டிக் கொண்டிருந்த டூரிங் டாக்கீசுகளுக்கு எம தர்மனாக பொதிகை மாறியது.

ஒரு கதவு அடைந்தால் மறு கதவு துறக்கும் என்பது போல், விழி பிதுங்கி நின்ற இவர்களுக்கு ஆத்ம ரக்ஷகனாக வந்தன அந்தக் கால கட்டத்தில் வெளியான உலகத்தரம் வாய்ந்த மலையாளத் திரைப்படங்கள்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் என்ற புண்ணியவான் 'பாவம் கொடூரன்,' பீமன், வாழு வாழ விடு, மாமனாரின் தாகம், போன்ற 'நல்ல' படங்களை வெளியிட்டார்.

மாற்று வழியாக இவர்கள், சனி ஞாயிறு பகல் காட்சிகளாக (ஆண்களுக்கு மட்டும்) இந்தப் படங்களை திரையிட்டு கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அன்று சைக்கிள்கள்தான் சாமான்யனின் வாகனம். மதியக் காட்சிக்கு ஊரில் உள்ள மொத்த சைக்கிள்களும் டூரிங் டாக்கீசில்தான் நின்று கொண்டிருக்கும்.
மற்ற நாட்களில் டிக்கெட் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என்றால், இந்த நாட்களில்
இரண்டு ரூபாய் மற்றும் மூன்று ரூபாய்.

ஜாதி, மத, இன, நிற, மொழி, கட்சி மற்றும் வயது பேதமின்றி சிறுவர் முதல் பல் போன முதியவர் வரை
வருவார்கள். மொத்தமே படம் ஒரு மணி நேரம் ஓடும். இதில் அதிகபட்சம் இருபது நிமிடம் மற்ற காட்சிகள் ஓடும்.


படம் துவங்கியதும் பிரேம் நசீர் '
ரிதுமதியாய் தெளி மானம், மதுமதியாய் நின் ரூபம் ' என்று பாட, சீமா 'ப்ரனமாயி என் நாணம்' என்று பாடுவார். படத்தின் பிரிண்ட் பாடாவதியாயிருக்கும் .

திடீரென திரையின் இடது வசம் ஒரு சிகப்பு விளக்கு மின்னி மின்னி எரியும்.
அனைவரும் உஷாராகி விடுவார்கள். எங்கும் நிசப்தம். படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத இசை, சீன் எல்லாம் வரும். பத்து நிமிடம் ஓடும்.

உடனே இடைவேளை. மற்ற படங்களுக்கு இடைவேளை ஐந்து நிமிடம் என்றால் இதற்கு மட்டும் பதினைந்து நிமிடங்கள். காண்டீனில் உள்ள சிகரட், பீடி, முறுக்கு, தட்டை, கடலை மிட்டாய் எல்லாம் காலியாக வேண்டுமே. எதிர்பார்த்தபடி எல்லாம் காலியாகும், உடன் படம் துவங்கி விடும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, மகன், பேரன், அனைவரையும் இங்கு காணலாம். முன் வரிசையில் இருக்கும் அப்பா எங்கே தன்னைப் பார்த்து விடுவாரோ என்று மகன் தலையில் வெள்ளைத் துண்டைப் போட்டு இரண்டாம் வரிசையில் இருப்பார். இவரது மகன் மூன்றாம் வரிசையில் இருந்து கொண்டு, எங்கே இந்த ரெண்டு பெருசுகளும் நம்மைப் பார்த்து விடுமோ என்று டென்சனில் இருப்பார்.

மீண்டும் படம் துவங்கியதும் சிகப்பு விளக்கு எரிந்து அணைந்தவுடன், அவசரத்தில் ஒவ்வொருவராக நழுவ ஆரம்பிப்பார்கள்.

இப்படியாக கொஞ்ச காலத்திற்கு டூரிங் டாக்கீசுகளுக்கு சுக்ர திசை ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் ஒரு ஆப்பு வந்தது.. அது பின்னால்.

இந்தக் கால கட்டங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தெற்காசியாவில் உள்ள 'புன்னகை மன்னன்களிடம்' இருந்து எப்படி பணம் கறக்கலாம் என்று சிந்தித்த போது உருவானதுதான் இது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இந்த சாத்தான் மெது மெதுவாக ஊடுருவ ஆரம்பித்தது. இந்தக் கால கட்டங்களில் தான் மன் மாமன் சங்கும், தமிழ் நாட்டு பீதாம்பரமும் 'உலக மயமாக்கல்' என்ற பெயரில் ஒவ்வொரு இந்தியனின் வேட்டியையும் உருவ ஆரம்பித்தனர்.

பெப்சி, கோலா போன்ற நச்சுக் கொல்லிகள் எல்லாம் உள்ளே புகுந்தன.
அதுவரை நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருந்த சிறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும், மீண்டும் முளைக்காதபடி கான்கிரீட் கல்லறைகளில் மூடப்பட்டன.

தமிழின் முதல் தனியார் தொலைக்காட்சியாக 'கன்' டிவி பிறந்தது. தமிழும், கூடவே தமிழனும் வளர ஆரம்பித்தன, ஆரம்பித்தனர்.
இதன் துவக்கம் காரணமாக வை கோ தப்பித்தார்.

'வணக்க்க்கம்ம்ம்ம்' என்று தமிழை புதுமையாக உச்சரித்து நம்மை அதிர வைத்தார் நிர்மலா பெரியசாமி.

டை கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு 'ஜேம்ஸ் வசந்தன்' டாப் டென்னில் நடிகர்களை வாரிக் கொண்டிருந்தார்.

'ஏன் இப்படி கடுமையாக விமர்சிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, 'மண்டபத்தில் எழுதிக்கொடுப்பதை வாசிப்பது தான் என் வேலை' என்றார்.

ரெகோ என்பவர் 'ஜோடிப்பொருத்தம்' நிகழ்ச்சியை அருமையாக நடத்திக் கொண்டிருந்தார். இப்போது அவரைக் காணவில்லை.

பெப்சி வந்த போது கூடவே பெப்சி உமாவும் வந்தார். தமிழ் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டு அளப்பற்கரியது.

பல புதிய தமிழ் வார்த்தைகளை வடிவங்களை இவர் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதில் மனங்கவர்ந்த ஒன்று இது.

தொலைபேசி நேரடி ஒளிபரப்பில் பெண்களிடம் பேசும்போது, உங்களுக்கு எத்தனை குழைந்தைகள் என்று கேட்கவே மாட்டார். 'எவ்வளவு குழைந்தைகள் என்றுதான் கேட்பார்.

அதுவரை அவ்வளவாக பிரபலமாகாத ஒரு இதழ், இதன் விளம்பரங்கள் தமிழர்களின் மனம் கவர்ந்தது.

'வாங்கி விட்டீர்களா, இந்த வாரம்,' என் ஒரு பெண் முக்கும் குரலில் முக்கி முக்கி பேசி நம்மை மூக்கில் விரல் வைக்கச் செய்தார்.

இதுபோல் பல நிகழ்ச்சிகளிலும் தமிழ் வளர்ந்தது.
அதுவரை பொதிகையில் புடவை அணிந்த பெண்களைக் கண்டு ரசித்த தமிழன், நவீன உடைகளில் நவீன தமிழ் பேசும் இளம் பெண்களைக் காண ஆரம்பித்தான்.

'உங்கள்கு இந்தப் படம் அவ்ளவு பெருசாப் பிடிக்குமா.. நைஸ்'
போன்ற குயில் குரல்கள் தமிழனுக்குப் பிடித்துப் போனது.

அடுத்துராஜா டி வி, இவர்களுக்கு ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகள் ஒன்றும் தேவை இல்லை... வீடியோ கடையில் இருக்கும் பழைய வீடியோ காசட்டுகளை தூசு தட்டி அத்தப் பலசல் படங்களைத் தொடர்ந்து போட்டு பெருசுகளை மகிழ வைத்தார்கள்.

ஆளாளுக்கு ஒன்று எனும்போது நமக்கும் ஒன்று வேண்டுமே என்று அம்மாவும் ஒன்று துவங்கினார்.

சும்மா இருப்பாரா சாராய மன்னன். அவரும் ஆரம்பித்தார் 'அஜய்' டி வி.

கடைசி மூன்றும் சரியாகப் போணியாகவில்லை.

அம்மாவின் டி வி மூடப்பட்டு கடையடைக்கப்பட்டாலும், பீனிக்ஸ் பறவை போல் புத்துயிர் கொண்டு திரும்பி வந்தது.

சாராய மன்னன் இந்தப் பூதத்திடம் சரணடைந்து விட்டார்.

இந்தக் கால கட்டங்கள் நல்ல முறையில் கல்லாக் கட்டிக்கொண்டிருந்த டூரிங் டாக்கீசுகள் ஒவ்வொன்றாக மூடுவிழா நடத்த ஆரம்பித்தன .

முக்கிய காரணம் ஒரு பிரபல சேனலில் , நடு நிசிக்கு ஒளிபரப்பான 'மிட் நைட் மசாலா' எனும் நிகழ்ச்சி.

தமிழ் திரைப்படங்களில் இது வரை நாம் பார்த்திராத, பார்க்க விட்டுப் போன மசாலாப் பாடல்களை ஒளிபரப்பி கலைச்சேவை தொடர்ந்தது.

பகலில் ஒளிபரப்பினால், சிறுவர்கள் சீரழிந்து விடுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இந்தச் சேவை இரவில் வழங்கப்பட்டது. நாளடைவில் நிறுத்தப்பட்டது. ஒரு வேளை தமிழக மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு பேருதவியாக இந்த நிகழ்ச்சி இருந்திருக்கலாம் என்பதாலோ என்னவோ??

குவிந்து கிடந்த ஆங்கில சேனல்கள். தமிழன் பார்க்காததை எல்லாம் பார்க்க ஆரம்பித்தான். 'வி' சேனல், ஸ்டார் மொவீஸ், ஹெச் பி போன்ற நல்ல சேனல்களில் 'தாராள மயமாக்கல் சேவை' தொடர்ந்து கொண்டிருந்தது.

தமிழனின் முற்போக்கு சிந்தனை இங்கு நன்றாக வேலை செய்தது.
'வி' சேனலில் வரும் பெண்கள் எல்லாம் ஏழைகள். காசிருந்தால் நல்ல உடைகள் உடுக்கலாமே...காசில்லாத காரணத்தினால்தான்
சிங்கள் பீஸ், டபுள் பீஸ் உடைகளில் வருகின்றார்கள் என்று சிந்தித்து, பரிதாபப்பட்டு ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

இப்படியாக ஒரு பதினைந்து வருடங்கள் ஓடி விட்டது.

இந்தக் கால அளவில் நம் ஊடகங்கள் எண்ணிக்கையில் பெருகி விட்டன.

ஆனால் தரத்தில் உயர்ந்துள்ளனவா என்பதுதான் கேள்வி..

எந்த ஒரு சேனலாவது தமிழனின் ஏதாவது ஒரு பிரச்சனைக்காகக் கொடி பிடித்த சரித்திரம் இருக்கின்றதா??

இலங்கைத் தமிழர் இன்னல், ராமேஸ்வரம் மீனவர்கள் படும் துயரம், அரசியல் அராஜகம், இது போன்ற பிரச்சனைகளில் பெரும்பான்மையான இந்தச் சேனல்கள் வகித்த பங்கு நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே???

முன்னணி சேனல்கள் கட்சி சார்ந்த சேனல்களாக மாறி விட்டன.
அஜய் டி வி, இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள பிரபல பின் நவீனத்துவ எழுத்தாளரிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.

ராஜா டி வி கணக்கில் சேராது.

தமிழ் நாட்டுக்குள்ளேயே புழங்கும் சில குட்டி சேனல்கள் உள்ளன.

இவை எல்லாம் இலவச சேனல்கள். ஒரு ரெசிவெர், டிஷ் இருந்தால் இன்சாட் ஒன் சி சாட்டிலைட்டை டியூன் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

இவைகளில் வெளியாகும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால், கருமமே, காந்தி நமக்கெல்லாம் ஏன் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று தோன்றும்???

தமிழனை, இன, மதம், ஜாதி, ரீதியில் பிரிப்பதில் இந்தச் சேனல்கள் முக்கிய பங்காற்றுகின்றனவோ என்ற ஐயப்பாடு இன்று சாதாரண மனிதனின் உள்ளத்தில் கூட எழத் தொடங்கி விட்டது.தமிழனுக்கும், தமிழ் நாட்டிற்கும் மிகப் பெரிய பெருமை ஒன்று ஊடகத்துறையில் இருக்கின்றது. உலகிலேயே அதிகமாக அரசியல் கட்சிகள்/அமைப்புகள் ஆளுக்கொரு சேனல் வைத்திருப்பது இங்கு தான்.


பெரும்பாலான சேனல்களும் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட அமைப்புகளை ஆதரிப்பவை.

புகழ் பெற்ற ஒரு சேனல் வெளி நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமானது.

நகர்ப்புறங்களில் அதிகம் பார்க்கப்படும் முன்னணி சேனல்களில் பயனுள்ள எந்த நிகழ்ச்சியும் பார்ப்பது அரிது.

கிராமப் புறங்களில் அதிகம் பார்க்கப்படும் இலவச சேனல்களில் பயனில்லா நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பது எளிது.

சில சேனல்களில் நடக்கும் 'கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ, இவைகளைப் பார்த்தாலே..... வடிவேலு சொன்னது போல் வாயில் நன்றாக வருகின்றது...


இந்த நிகழ்ச்சிகளில் நடக்கும் கூத்துக்கள், நடிப்பு, வியாபார உக்தி, பார்வையாளர்களை ஏமாற்றி பணம் உண்டாக்கும் குறுக்கு தந்திரம்,..... எல்லாமே அமெரிக்கர்களை எளிதாக ஏமாற்றி கோடிகள் குவிக்கும் இவர் கூட இவர்களின் முன்பு தோற்றுப்போவார் என்று எண்ணத் தோன்றும்.

இந்த நிகழ்ச்சிகளில் நடக்கும் சில கோமாளித்தனங்களை இங்கு பாருங்கள்.


ஆஸ்கார் அவார்டு நிச்சயமா இவனுகளுக்குத்தான்

இந்தப் பூனையும் பால் குடிக்குமா???Monday, 19 July 2010

ஹைப்பர் டென்ஷன் வரும்போது என்ன செய்யலாம்????நம் அன்றாட வாழ்வில் டென்ஷன் என்பது சகஜமான ஒன்று.
நாம் நிம்மதியாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள கூட்டம் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.

உறவினர், நண்பர், சீனியர், ஜூனியர், முன்பரிச்சியமில்லாதவர், முதலாளி, தொழிலாளி.... என எந்த உருவத்திலும் ரூபமெடுத்து நம்மைத் தொல்லைப்படுத்த வரலாம். சகிப்பதைத் தவிர நமக்கு வேறொன்றும் மார்க்கம் இல்லை.

இந்த டென்சன் எதனால் வருகின்றது. மனம் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறும் போது...

மனது தடுமாறும் போது....வார்த்தைகள் தடுமாறும்... வார்த்தைகள் தடுமாறும்போது... நமது நார்மல் பழக்க வழக்கங்கள் தடுமாறும்.

சரி.. இவையெல்லாம் ஏன் தடுமாறுகின்றன. நமக்குப் பிடிக்காத... நம்மால் ஜீரணிக்க முடியாத... நம்மால் சகித்துக் கொள்ள முடியாத நிகழ்வுகள்... நம்மில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் போது...

ஆனால்... இந்த நிகழ்வுகளைக் கண்டு... அயர்ந்து போகாமல்.. அவைகளை ஏற்றுக் கொண்டு... தாங்கிக் கொண்டு.... முன் செல்லும் ஒரு பக்குவ நிலைமையை மனம் அடைய வேண்டும். இதை அனைவரும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். (ப்ளீஸ் நோட் தி பாயிண்ட்).

ஒரு கதவு அடையும்பொழுது... மற்றொரு கதவு திறக்கும் என்பது பெரியோர்கள் சொன்னது.

சகிப்புத்தன்மை மனிதனுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம்.

நோய்கள் மிகுந்த உலகில், அதற்கான மருந்துகளையும், அதைக் கண்டு பிடிக்கும் திறனையும் இறைவன் நமக்குத் தந்திருக்கிறான்.

இந்த நேரத்தில் இணையத்தைக் கண்டு பிடித்த மனிதனுக்கு இரு கரம் கூப்பி நன்றி செலுத்துகிறேன்.

ஏனெனில், எனது ஹைப்பர் டென்சனுக்கு... நான் மருத்துவரை நாடுவதில்லை.

இணையமே எனது மருத்துவமனை, மருந்தகம், மருந்து எல்லாம்.

இது போன்ற சமயங்களில் எனது டென்சனைக் குறைப்பதற்காக நான் பார்க்கும் சில தளங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நீங்களும் பார்த்துப், படித்து டென்சனைக் குறைத்துக் கொள்ளலாம்.

இதற்கு யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், டயட், ஆன்மிகம், போன்ற உடலை நோக வைக்கும் எந்தப் பயிற்சியும் தேவையில்லை. மருந்து, மருத்துவர், போன்ற செலவுகளும் இல்லை.

இந்தத் தளங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, எனக்கு வாழ்வில் எந்த சோதனை வந்தாலும் எதிர் கொள்ளும் சக்தி , இடி விழுந்தாலும் தாங்கும் திறன், எதையும் தாங்கும் இதயம்... என நெஞ்சுறுதி கூடி விட்டது. (????)


Saturday, 17 July 2010

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு... எபிக் ப்ரௌசெர்இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு... எபிக் ப்ரௌசெர்

ப்ரௌசெர் உலகில் புதிய புரட்சி...

இந்தியர்களுக்கென்றே தனிச் சிறப்புடன் வடிவமைக்கப் பட்ட எபிக் ப்ரௌசெர் ஜூலை பதினைந்தாம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அலோக் பரத்வாஜ் என்பவருக்குச் சொந்தமான 'ஹிடன் ரேப்லெக்ஸ்' எனும் பெங்களூரில் இயங்கும் நிறுவனத்தின் படைப்பு இது.

பல் வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இதை இலவசமாக இங்கு தரவிறக்கம்செய்து கொள்ளலாம்.

இதுவரை பயன்பாட்டில் உள்ள ப்ரௌசெர்களுடன் ஒப்பிடும்போது... எல்லாவற்றையும் விட ஒரு படி மேல்தான்.

தற்போது பன்னிரண்டு இந்திய மொழிகளில் பயன்பாட்டு வசதி உள்ளது.

இதன் சிறப்பம்சங்களைச் சொல்லலாம்... சொல்லலாம்... சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

நீங்களும் தரவிறக்கம் செய்து உபயோகித்துப் பாருங்கள்....

மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


Thursday, 8 July 2010

நாத்திகமும் பிரபலப் பதிவர் வால் பையனும்

வால் பையன் என்ற பிரபலப் பதிவர் இப்போது வலையுலகில் நாத்திகத்தைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்து வருகின்றார்.

குட்டையைக் கலக்கினால்தான் மீன் பிடிக்க முடியும். இவரும் நன்றாகத்தான் கேள்விகள் கேட்கின்றார். இந்தப் பதிவிற்குச் சென்றபோதுதான் இவரைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது.

பல நூறு வருடங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த நாம் கடந்த அறுபத்திமூன்று வருடங்களாகத்தான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றோம்.

ஒரு பதிவு எழுதி ஏதாவது ஒரு வாரப் பத்திரிக்கைக்கு பதிவுத் தபாலில் அனுப்பினால், எப்போது வெளியாகும் என்று இறைவனுக்கே தெரியாது.

வெளியானாலும், நாப்பது பக்கத்தை நாலு பக்கமாக அவர்கள் இஷ்டத்திற்கு சுருக்கி வெளியிடுவார்கள். ஆறுமாதம் கழித்து மணி ஆர்டரில் ஒரு சிறிய தொகை வரும்.

இன்று நிலைமை மாறி விட்டது. நினைத்த நேரத்தில் நினைத்த பதிவுகளை நாமே வெளியிட முடியும். உடனுக்குடன் எதிர்வினை நிகழ்த்த முடியும்.

சிறிய புதிய பதிவர்கள் கூட பிரபல எழுத்தாளர்களையும், அறிவாளர்களையும் கேலி செய்து மிமிக்ரி, பாரடி முறையில் பதிவுகள் எழுத முடியும்.

யாராவது ஒரு சீரியஸ் பதிவு வெளியிட்டாலும், அதைக் கூட மற்றவர்களால் காமெடி ஆக்க முடியும். இது இன்றைய தமிழ் வலை உலகத்தின் கதி.

சரி விசயத்திற்கு வருவோம்....

இவ்வளவு துணிவாகத் தன் கருத்துக்களை வெளியிடும் இவரது துணிவைப் பாராட்ட வேண்டும். அதற்காக இவர் சொல்வதை எல்லாம் நாம் அங்கீகரிக்கின்றோம் என்று அர்த்தமில்லை.

கருத்து, எழுத்து சுதந்திரம் எல்லாவருக்கும் இருக்கின்றது.
கடவுள் இல்லை என்று சொல்வதற்காக இவரை என்னால் பாராட்ட முடியாது. அதே சமயம் பழிக்கவும் முடியாது.

அதேபோல் நான் ஒரு பிராமணன், இந்த ஜாதியைச் சேர்ந்தவன், அதில் எனக்கு பெருமைதான் என்று சொல்வது ஒரு பதிவரின் உரிமை. அவரை ஏன் நாம் ஜாதி வெறியர் என்று அழைக்க வேண்டும்????

மதங்கள் நாம் பிறக்கும் போதே நம் குடும்பத்தவர்களால் நம் தலையில் அடித்து ஏற்பிக்கப்படும் ஒன்று. விவரம் தெரியாத வயதிலேயே நம் மனம் அதற்கு அடிமையாகி பழக்கப்பட்டு ஒன்றி விடுகின்றது.

ஒரு மனிதன் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவனாகின்றான். என் பெற்றோர் ஒரு ஹிந்து. எனவே நானும் ஒரு ஹிந்து. முஸ்லிம், கிருஸ்துவர் என்றால் நானும் முறையே முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர்.

அவரவருக்கு அவரவர் விருப்பம். அவரவர் வழியில் அவரது பயணம்.

எந்த மதமும் வன்முறையைப் போதிப்பதில்லை....போதித்ததில்லை...

ஒரு தீவிரவாதி ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் குர்ரானையும் வைத்திருக்கின்றார் என்றால்... அப்படிச் செய்ய ஒரு போதும் குர்ரான் அவரைப் போதிக்கவில்லை.

சிலுவைப் போரில் ஒரு கையில் வாளும் மறு கையில் சிலுவையும் வைத்துக் கொண்டு போர் செய்தார்கள் என்றால்... பைபிளில் ஒரு போதும் வன்முறைக்கு இடமில்லை.

சூலாயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிற மதத்தின் புண்ணிய ஸ்தலத்தை இடித்தார்கள் என்றால்... இந்து மதத்தில் எந்த ஒரு மத ஆலயங்களையும் இடிப்பதற்கு போதனைகள் சொல்லப்பட்டிருக்கவில்லை.

தவறான வழியில் செல்லும் ஒவ்வொரு தனி மனிதனின் இழிவு செயல்களால் விமர்சிக்கப் படுவது அவர் சார்ந்த மதங்களே. காட்டுமிராண்டிகளாகத் திரிந்து, கட்டுப்பாடின்றி மனித குலம், சீரழிந்த போது , அவர்களை நல்வழிப்படுத்த ஒவ்வொரு கால கட்டங்களிலும் புனிதர்கள் தோன்றி அருளிய நல் உரைகளை, பின்னால் வந்தவர்கள், நல்லவர்கள் எல்லாவரும் பின்பற்றி நடந்தார்கள்.

இந்து மதம் புராணங்களில் இருந்து வேர் கொண்டது.
கிருஸ்துவ மதம் யூதர் குலத்தில் பிறந்த இயேசு நாதரைப் பின்பற்றியது.
யூதர் குலத்தில் பிறந்தவரைப் பின்பற்றி கிறிஸ்துவம் எனும் புதிய மதம் உருவானது. இதற்காக யூதர்கள் இயேசு கிறிஸ்து எங்களுக்குத்தான் என்று சொந்தம் கொண்டாடவில்லை.

கேரளாவில் ஸ்ரீ நாராயண குரு என்பவர் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று மக்களுக்கு அறிவுரை கூறினார். இன்று அவரைப் பின்பற்றுபவர்கள் 'ஈழவர்' என்று அழைக்கப்படுகின்றனர். நம்பூதிரி, நாயர் போல இது ஒரு ஜாதியாகி விட்டது.

இங்கு வளைகுடா முழுவதும் சுற்றுபவன் நான். இன்னமும் பல மனிதர்களின் குணத்தையும் சுபாவத்தையும் பார்க்கும் போது... இப்போதே இவர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால்... ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்.... அந்தச் சூழ்நிலையில் இவர்களையெல்லாம் நல்வழிப்படுத்தி, ஒரு மதத்தையும் உருவாக்கி...நேர் வழிக்கு கொண்டு வந்த நபிகள் உண்மையிலேயே ஒரு மகத்தான இறைத் தூதர்தான்.


அடுத்த வாதம்.

கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பது....

நீங்கள் ஏன் கடவுளைத் தேடுகின்றீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் மனமே கடவுள். அன்பே சிவம், அஸ்ஸலாமு அலேய்கும், கர்த்தர் உன்னுடனே...
இவையெல்லாம் ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் கடவுள் இருப்பதை உணர்த்துபவை.
சிரிக்கும் குழந்தையின் களங்கமில்லா முகத்தைப் பாருங்கள்...
உயிர் போகும் நிலையில் உள்ள ஒருத்தரைக் காப்பாற்றுபவரைப் பாருங்கள்...
இது போல் பல சூழ்நிலைகளில் பார்க்க முடியும்.

சிறந்த உதாரணம் என் அனுபவம் :

சில வருடங்களுக்கு முன்பு, தனியாகக் காரில் ஒரு நீண்ட தூர யாத்திரை..
நேரம் அதிகாலை ஆறு மணி...
வீடு இன்னம் ஒரு மணிப் பயணம்தான்.
சிறிதாக அயர்ந்தவன் வாகனத்தை ரோடருகில் இருந்த மரத்தில் செலுத்தி விட்டேன்.

தலையில் பலத்த அடி. ரத்தம் ஒழுகியது. உடலை அசைக்க முடியவில்லை. நினைவு போய் விட்டது. சிறிதாக நினைவு வந்த போது ஒரு டாக்சியில் ஒரு ஆள் என்னை பின் சீட்டில் உட்கார வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது முகத்தைப் பார்த்தேன். மங்கலாக ஒரு உருவம். என்னால் பேச இயலவில்லை.

மறுநாள் காலை...நினைவு வந்த போது...ஒரு மருத்துவமனையில்... தலையில் பெரிய கட்டு....கூடவே கையிலும்...

குடும்பத்தினர் அனைவரும் ஆஜராகியிருந்தனர். அப்போதுதான் நினைவு வந்தது...அணிந்திருந்த மோதிரங்கள், மாலை, உயர் ரக வாட்ச், பர்ஸ் ஒன்றும் காணவில்லை... வந்த என் உறவினர், 'எல்லாம் பத்திரமாக இருக்கின்றது' என்றார்.

என்னைக் கொண்டு வந்த அந்த நல்ல உள்ளம், என்னை மருத்துவமனையில் சேர்த்ததோடு, எப்போதும் என் கூடவே தோளில் தொங்கிக்கொண்டிருக்கும் பாகிலிருந்து என் டயரியைக் கண்டு பிடித்து, உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததுடன், அரியவகை ரத்தம் என்பதால், தன் ரத்தத்தையே எனக்கும் கொடுத்திருந்தார். இதில் மிகப் பெரிய கொடுமையா அல்லது புண்ணியமா தெரியவில்லை. எனது அவசர சிகிச்சைக்காக ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தையும் தன் கையில் இருந்து கொடுத்துள்ளார்.

அவரை விசாரித்த போது 'நேற்றிரவே கிளம்பி விட்டார்' என்ற பதில். எங்கெல்லாம் விசாரித்தும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

எவ்வளவு முயற்சி செய்தும் அவரது முகம் மட்டும் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. என் வாழ்க்கையின் மிகப் பெரிய இயலாமையாக இதைக் கருதுகின்றேன்.

இப்போதும் அவர் முகத்தை நினைவுபடுத்த கடும் முயற்சி செய்கிறேன்.
மங்கலாக...சில சமயம் ஸ்ரீ கிருஷ்ணன் போல, இயேசு நாதர் போல, இறைத் தூதர் போல என் உள் கண்களில் அவரது உருவம் தெரியும்.

எனக்கிருப்பது ஒரே ஒரு சந்தேகம்தான்....

இவர் கடவுள் உருவில் வந்த மனிதனா... அல்லது
மனிதன் உருவில் வந்த கடவுளா...என்பதுதான்.

ஏனெனில் என்னைப் பொறுத்த வரையில் அவர் எனக்கு கடவுளைப் போல.

அடுத்த அரை மணி நேரம் அவர் என்னைக் காப்பாற்றியிருக்கவில்லை என்றால் நான் இந்நேரம் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். இது டாக்டர் என்னிடம் சொன்னது.

எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் மூட நம்பிக்கைகள் இல்லை.

அலுவலகத்தில், தனிப்பட்ட முறையில் மன சஞ்சலங்கள் வரும்போது,

கண்களை மூடிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டு...

சீர்காழி பாடிய 'மயிலாக நான் மாற வேண்டும், டி எம் எஸ் பாடிய 'எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே,

நாகூர் ஹனிபா பாடிய 'தமிழகத்து தர்காக்களைப் பார்த்து வருவோம்,

யேசுதாஸ் பாடிய 'குழலும் யாழும் குரலினில் இனிக்க கும்பிடும் வேளையிலே, மழலை இயேசுவை மடியினில் ஏந்தி மாதா வருவாளே'

போன்ற பாடல்களைக் கேட்கும்போது மனதுக்கு இதமான நிவாரணம் கிடைத்ததுபோல் இருக்கும்.

இங்கு மதம் இல்லை, ஜாதி இல்லை, சண்டை இல்லை, மனித நேயம் மட்டுமே...

மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்குபோதேல்லாம் மீனாக்ஷி அம்மன் கோவிலைத் தரிசிக்கத் தவறுவதில்லை.

அந்தி மயங்கும் நேரம்... பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டுகளில்... அமர்ந்து கொண்டு கோபுரங்களின் மீது வழியும் சூரியக் கதிர்களைக் கண்டு கொண்டு, ஐந்து நிமிடம் அமர்ந்திருப்பேன்.

மனதில் இனம் புரியாத சுகம் இருக்கும்.

முதன் முறையாக வளைகுடா வந்த போது... இங்கு நெருக்கமாக எங்கு பார்த்தாலும் இருக்கும் சிறிய சிறிய பள்ளிவாசல்கள். ஒவ்வொரு தொழுகை நேரத்திற்கும் முன்பாக 'அல்லாஹ் அக்பர்.... அல்லாஹ் அக்பர்..' என்ற ஒரு பிரார்த்தனைப் பாடல். எங்கு பார்த்தாலும் ஒலிக்கும்.

முதலில் கேட்ட போது எனக்கே காது அடைப்பது போல் இருந்தது. முதியவரான
ஒரு பாகிஸ்தானியரை அழைத்து 'இதன் பொருள் என்ன.. என்று கேட்டேன்.

என்னைப் பற்றி விசாரித்தவர், ஏன் கேட்கிறாய் என்றாய்.

ஆர்வம் காரணமாகத் தெரிந்து கொள்ளத்தான் என்றேன்.

இதன் பெயர் 'பாங்கு' தொழுகைக்கு வருமாறு அனைவரையும் அழைப்பது' என்று கூறி அதன் முழுப் பொருளையும் உணர்ச்சி மயமாகச் சொன்னார்.
ஒரு ஹிந்து முஸ்லிம் மதம் பற்றிய ஒரு விளக்கம் கேட்பது மிகவும் பெருமையாகவும் மகிழ்வாகவும் இருப்பதாகச் சொன்னார்.

அதன் பின்னர் எனக்கு 'பாங்கு' கேட்கும்போதெல்லாம் ஒரு பரவசம்.

'பள்ளிக்கட்டு சபரி மலைக்கு' என்ற பக்திப் பாடல் மீதுள்ள ஆர்வம் இந்த 'பாங்கின்' மீதும் வந்து விட்டது.

இங்கு 'பாங்கு' மாறவில்லை. ஹிந்து, முஸ்லிம் மதங்கள் மாறவில்லை....
மாறியது என் மனம்தான்.

கிருஸ்துவ தேவாலயங்களில் 'உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக.... உன்னதங்களிலே ஓசான்னா.... என்று கோரசாகப் பாடும் போது.....
ஹிந்து ஆலயங்களில் பஜனை கேட்கும் அதே மனநிலை.... ஒரு வித உணர்தல் நிலை இன்றும் எனக்கு...

ஒவ்வொரு மதங்களிலும் சொல்லப்பட்ட அறிவுரைகளும் நல்வழிகளும் அந்தந்தக் கால கட்டங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டவை.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... என்றார் இயேசு நாதர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றார் வள்ளுவர். இன்று நம்மில் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கின்றோம்???.

முஸ்லிம் மதம் உருவானபோது... இறைத்தூதர் நபிகளையும், அவரது ஆதரவாளர்களையும் துன்புறுத்தியவர்கள், எந்த மதத்திலும் இல்லாதவர்கள்.

அன்று அவர்களுக்கு எதிரி அவர்கள் தான். அதை முன்னிறுத்தி குர்ரானில் சில அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. அதை வைத்து குர்ரான் மற்ற மதத்தவரை வெறுக்கின்றது என்று இன்று கூறுவது தவறு.இதோ மேலே படத்தில் உள்ள பூனைக் குட்டி இங்கு எனக்குள்ள நல்ல நண்பர்களில் ஒன்று. எங்களுக்குள் ஆறறிவு, ஐந்தறிவு, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என எந்த ஒரு வேறுபாடும் இல்லை. வளைகுடாவில் இருந்தாலும், நான் இதற்கு, 'மணிக்குட்டி' என்று பெயர் வைத்திருக்கின்றேன்.

எனவே மதங்களைக் குறை சொல்வதை நிறுத்துவோம்.

செய்யும் தொழிலை வைத்து அந்தக் காலத்தில் நாமே உருவாக்கிய ஜாதிகளை ஒழிப்போம்.

சண்டையைத் தவிர்ப்போம்.

மனித நேயத்தை வளர்ப்போம்.தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

கூடுதல் இணைப்பு:
முதலில் காலத்தின் இந்த சிறு கணிப்பைக் கவனித்துப் படியுங்கள்.

கணிதவியலின் விளையாட்டை இப்போது பார்ப்போம்.

கால்பந்து உலகக் கோப்பை என்பது ஏற்கனவே எண்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1. Brazil won the World Cup in 1994; before that they also won in 1970.Adding1970 + 1994= 3964

2. Argentina won its last World Cup in 1986; before that they also won in 1978. Adding 1978 + 1986= 3964

3. Germany won its last World Cup in 1990; before that they also won in 1974. Adding 1974 + 1990= 3964

4. Brazil also won the World Cup in 2002; before that they also won in 1962. Adding 1962+ 2002= 3964

5. Therefore if you want to know what nation is going to win the World Cup in 2010, you only have to subtract 2010 from the magic number that we have determined: 3964.3964 minus 2010 = 1954... In 1954 the World Cup was won by Germany!!!


Probably not scientific... but pretty interesting..

இந்தக்கணிப்பு பொய்த்து விட்டது. இனி ஜெர்மனியில் அக்டோபஸ் கணித்தபடி ஸ்பெயின் கோப்பையை வெல்லுமா என்று பார்ப்போம்.