Thursday, 8 July 2010

நாத்திகமும் பிரபலப் பதிவர் வால் பையனும்

வால் பையன் என்ற பிரபலப் பதிவர் இப்போது வலையுலகில் நாத்திகத்தைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்து வருகின்றார்.

குட்டையைக் கலக்கினால்தான் மீன் பிடிக்க முடியும். இவரும் நன்றாகத்தான் கேள்விகள் கேட்கின்றார். இந்தப் பதிவிற்குச் சென்றபோதுதான் இவரைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது.

பல நூறு வருடங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த நாம் கடந்த அறுபத்திமூன்று வருடங்களாகத்தான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றோம்.

ஒரு பதிவு எழுதி ஏதாவது ஒரு வாரப் பத்திரிக்கைக்கு பதிவுத் தபாலில் அனுப்பினால், எப்போது வெளியாகும் என்று இறைவனுக்கே தெரியாது.

வெளியானாலும், நாப்பது பக்கத்தை நாலு பக்கமாக அவர்கள் இஷ்டத்திற்கு சுருக்கி வெளியிடுவார்கள். ஆறுமாதம் கழித்து மணி ஆர்டரில் ஒரு சிறிய தொகை வரும்.

இன்று நிலைமை மாறி விட்டது. நினைத்த நேரத்தில் நினைத்த பதிவுகளை நாமே வெளியிட முடியும். உடனுக்குடன் எதிர்வினை நிகழ்த்த முடியும்.

சிறிய புதிய பதிவர்கள் கூட பிரபல எழுத்தாளர்களையும், அறிவாளர்களையும் கேலி செய்து மிமிக்ரி, பாரடி முறையில் பதிவுகள் எழுத முடியும்.

யாராவது ஒரு சீரியஸ் பதிவு வெளியிட்டாலும், அதைக் கூட மற்றவர்களால் காமெடி ஆக்க முடியும். இது இன்றைய தமிழ் வலை உலகத்தின் கதி.

சரி விசயத்திற்கு வருவோம்....

இவ்வளவு துணிவாகத் தன் கருத்துக்களை வெளியிடும் இவரது துணிவைப் பாராட்ட வேண்டும். அதற்காக இவர் சொல்வதை எல்லாம் நாம் அங்கீகரிக்கின்றோம் என்று அர்த்தமில்லை.

கருத்து, எழுத்து சுதந்திரம் எல்லாவருக்கும் இருக்கின்றது.
கடவுள் இல்லை என்று சொல்வதற்காக இவரை என்னால் பாராட்ட முடியாது. அதே சமயம் பழிக்கவும் முடியாது.

அதேபோல் நான் ஒரு பிராமணன், இந்த ஜாதியைச் சேர்ந்தவன், அதில் எனக்கு பெருமைதான் என்று சொல்வது ஒரு பதிவரின் உரிமை. அவரை ஏன் நாம் ஜாதி வெறியர் என்று அழைக்க வேண்டும்????

மதங்கள் நாம் பிறக்கும் போதே நம் குடும்பத்தவர்களால் நம் தலையில் அடித்து ஏற்பிக்கப்படும் ஒன்று. விவரம் தெரியாத வயதிலேயே நம் மனம் அதற்கு அடிமையாகி பழக்கப்பட்டு ஒன்றி விடுகின்றது.

ஒரு மனிதன் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவனாகின்றான். என் பெற்றோர் ஒரு ஹிந்து. எனவே நானும் ஒரு ஹிந்து. முஸ்லிம், கிருஸ்துவர் என்றால் நானும் முறையே முஸ்லிம் மற்றும் கிருஸ்துவர்.

அவரவருக்கு அவரவர் விருப்பம். அவரவர் வழியில் அவரது பயணம்.

எந்த மதமும் வன்முறையைப் போதிப்பதில்லை....போதித்ததில்லை...

ஒரு தீவிரவாதி ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் குர்ரானையும் வைத்திருக்கின்றார் என்றால்... அப்படிச் செய்ய ஒரு போதும் குர்ரான் அவரைப் போதிக்கவில்லை.

சிலுவைப் போரில் ஒரு கையில் வாளும் மறு கையில் சிலுவையும் வைத்துக் கொண்டு போர் செய்தார்கள் என்றால்... பைபிளில் ஒரு போதும் வன்முறைக்கு இடமில்லை.

சூலாயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிற மதத்தின் புண்ணிய ஸ்தலத்தை இடித்தார்கள் என்றால்... இந்து மதத்தில் எந்த ஒரு மத ஆலயங்களையும் இடிப்பதற்கு போதனைகள் சொல்லப்பட்டிருக்கவில்லை.

தவறான வழியில் செல்லும் ஒவ்வொரு தனி மனிதனின் இழிவு செயல்களால் விமர்சிக்கப் படுவது அவர் சார்ந்த மதங்களே. காட்டுமிராண்டிகளாகத் திரிந்து, கட்டுப்பாடின்றி மனித குலம், சீரழிந்த போது , அவர்களை நல்வழிப்படுத்த ஒவ்வொரு கால கட்டங்களிலும் புனிதர்கள் தோன்றி அருளிய நல் உரைகளை, பின்னால் வந்தவர்கள், நல்லவர்கள் எல்லாவரும் பின்பற்றி நடந்தார்கள்.

இந்து மதம் புராணங்களில் இருந்து வேர் கொண்டது.
கிருஸ்துவ மதம் யூதர் குலத்தில் பிறந்த இயேசு நாதரைப் பின்பற்றியது.
யூதர் குலத்தில் பிறந்தவரைப் பின்பற்றி கிறிஸ்துவம் எனும் புதிய மதம் உருவானது. இதற்காக யூதர்கள் இயேசு கிறிஸ்து எங்களுக்குத்தான் என்று சொந்தம் கொண்டாடவில்லை.

கேரளாவில் ஸ்ரீ நாராயண குரு என்பவர் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று மக்களுக்கு அறிவுரை கூறினார். இன்று அவரைப் பின்பற்றுபவர்கள் 'ஈழவர்' என்று அழைக்கப்படுகின்றனர். நம்பூதிரி, நாயர் போல இது ஒரு ஜாதியாகி விட்டது.

இங்கு வளைகுடா முழுவதும் சுற்றுபவன் நான். இன்னமும் பல மனிதர்களின் குணத்தையும் சுபாவத்தையும் பார்க்கும் போது... இப்போதே இவர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால்... ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்.... அந்தச் சூழ்நிலையில் இவர்களையெல்லாம் நல்வழிப்படுத்தி, ஒரு மதத்தையும் உருவாக்கி...நேர் வழிக்கு கொண்டு வந்த நபிகள் உண்மையிலேயே ஒரு மகத்தான இறைத் தூதர்தான்.


அடுத்த வாதம்.

கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பது....

நீங்கள் ஏன் கடவுளைத் தேடுகின்றீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் மனமே கடவுள். அன்பே சிவம், அஸ்ஸலாமு அலேய்கும், கர்த்தர் உன்னுடனே...
இவையெல்லாம் ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் கடவுள் இருப்பதை உணர்த்துபவை.
சிரிக்கும் குழந்தையின் களங்கமில்லா முகத்தைப் பாருங்கள்...
உயிர் போகும் நிலையில் உள்ள ஒருத்தரைக் காப்பாற்றுபவரைப் பாருங்கள்...
இது போல் பல சூழ்நிலைகளில் பார்க்க முடியும்.

சிறந்த உதாரணம் என் அனுபவம் :

சில வருடங்களுக்கு முன்பு, தனியாகக் காரில் ஒரு நீண்ட தூர யாத்திரை..
நேரம் அதிகாலை ஆறு மணி...
வீடு இன்னம் ஒரு மணிப் பயணம்தான்.
சிறிதாக அயர்ந்தவன் வாகனத்தை ரோடருகில் இருந்த மரத்தில் செலுத்தி விட்டேன்.

தலையில் பலத்த அடி. ரத்தம் ஒழுகியது. உடலை அசைக்க முடியவில்லை. நினைவு போய் விட்டது. சிறிதாக நினைவு வந்த போது ஒரு டாக்சியில் ஒரு ஆள் என்னை பின் சீட்டில் உட்கார வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது முகத்தைப் பார்த்தேன். மங்கலாக ஒரு உருவம். என்னால் பேச இயலவில்லை.

மறுநாள் காலை...நினைவு வந்த போது...ஒரு மருத்துவமனையில்... தலையில் பெரிய கட்டு....கூடவே கையிலும்...

குடும்பத்தினர் அனைவரும் ஆஜராகியிருந்தனர். அப்போதுதான் நினைவு வந்தது...அணிந்திருந்த மோதிரங்கள், மாலை, உயர் ரக வாட்ச், பர்ஸ் ஒன்றும் காணவில்லை... வந்த என் உறவினர், 'எல்லாம் பத்திரமாக இருக்கின்றது' என்றார்.

என்னைக் கொண்டு வந்த அந்த நல்ல உள்ளம், என்னை மருத்துவமனையில் சேர்த்ததோடு, எப்போதும் என் கூடவே தோளில் தொங்கிக்கொண்டிருக்கும் பாகிலிருந்து என் டயரியைக் கண்டு பிடித்து, உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததுடன், அரியவகை ரத்தம் என்பதால், தன் ரத்தத்தையே எனக்கும் கொடுத்திருந்தார். இதில் மிகப் பெரிய கொடுமையா அல்லது புண்ணியமா தெரியவில்லை. எனது அவசர சிகிச்சைக்காக ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணத்தையும் தன் கையில் இருந்து கொடுத்துள்ளார்.

அவரை விசாரித்த போது 'நேற்றிரவே கிளம்பி விட்டார்' என்ற பதில். எங்கெல்லாம் விசாரித்தும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

எவ்வளவு முயற்சி செய்தும் அவரது முகம் மட்டும் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. என் வாழ்க்கையின் மிகப் பெரிய இயலாமையாக இதைக் கருதுகின்றேன்.

இப்போதும் அவர் முகத்தை நினைவுபடுத்த கடும் முயற்சி செய்கிறேன்.
மங்கலாக...சில சமயம் ஸ்ரீ கிருஷ்ணன் போல, இயேசு நாதர் போல, இறைத் தூதர் போல என் உள் கண்களில் அவரது உருவம் தெரியும்.

எனக்கிருப்பது ஒரே ஒரு சந்தேகம்தான்....

இவர் கடவுள் உருவில் வந்த மனிதனா... அல்லது
மனிதன் உருவில் வந்த கடவுளா...என்பதுதான்.

ஏனெனில் என்னைப் பொறுத்த வரையில் அவர் எனக்கு கடவுளைப் போல.

அடுத்த அரை மணி நேரம் அவர் என்னைக் காப்பாற்றியிருக்கவில்லை என்றால் நான் இந்நேரம் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். இது டாக்டர் என்னிடம் சொன்னது.

எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் மூட நம்பிக்கைகள் இல்லை.

அலுவலகத்தில், தனிப்பட்ட முறையில் மன சஞ்சலங்கள் வரும்போது,

கண்களை மூடிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டு...

சீர்காழி பாடிய 'மயிலாக நான் மாற வேண்டும், டி எம் எஸ் பாடிய 'எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே,

நாகூர் ஹனிபா பாடிய 'தமிழகத்து தர்காக்களைப் பார்த்து வருவோம்,

யேசுதாஸ் பாடிய 'குழலும் யாழும் குரலினில் இனிக்க கும்பிடும் வேளையிலே, மழலை இயேசுவை மடியினில் ஏந்தி மாதா வருவாளே'

போன்ற பாடல்களைக் கேட்கும்போது மனதுக்கு இதமான நிவாரணம் கிடைத்ததுபோல் இருக்கும்.

இங்கு மதம் இல்லை, ஜாதி இல்லை, சண்டை இல்லை, மனித நேயம் மட்டுமே...

மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்குபோதேல்லாம் மீனாக்ஷி அம்மன் கோவிலைத் தரிசிக்கத் தவறுவதில்லை.

அந்தி மயங்கும் நேரம்... பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டுகளில்... அமர்ந்து கொண்டு கோபுரங்களின் மீது வழியும் சூரியக் கதிர்களைக் கண்டு கொண்டு, ஐந்து நிமிடம் அமர்ந்திருப்பேன்.

மனதில் இனம் புரியாத சுகம் இருக்கும்.

முதன் முறையாக வளைகுடா வந்த போது... இங்கு நெருக்கமாக எங்கு பார்த்தாலும் இருக்கும் சிறிய சிறிய பள்ளிவாசல்கள். ஒவ்வொரு தொழுகை நேரத்திற்கும் முன்பாக 'அல்லாஹ் அக்பர்.... அல்லாஹ் அக்பர்..' என்ற ஒரு பிரார்த்தனைப் பாடல். எங்கு பார்த்தாலும் ஒலிக்கும்.

முதலில் கேட்ட போது எனக்கே காது அடைப்பது போல் இருந்தது. முதியவரான
ஒரு பாகிஸ்தானியரை அழைத்து 'இதன் பொருள் என்ன.. என்று கேட்டேன்.

என்னைப் பற்றி விசாரித்தவர், ஏன் கேட்கிறாய் என்றாய்.

ஆர்வம் காரணமாகத் தெரிந்து கொள்ளத்தான் என்றேன்.

இதன் பெயர் 'பாங்கு' தொழுகைக்கு வருமாறு அனைவரையும் அழைப்பது' என்று கூறி அதன் முழுப் பொருளையும் உணர்ச்சி மயமாகச் சொன்னார்.
ஒரு ஹிந்து முஸ்லிம் மதம் பற்றிய ஒரு விளக்கம் கேட்பது மிகவும் பெருமையாகவும் மகிழ்வாகவும் இருப்பதாகச் சொன்னார்.

அதன் பின்னர் எனக்கு 'பாங்கு' கேட்கும்போதெல்லாம் ஒரு பரவசம்.

'பள்ளிக்கட்டு சபரி மலைக்கு' என்ற பக்திப் பாடல் மீதுள்ள ஆர்வம் இந்த 'பாங்கின்' மீதும் வந்து விட்டது.

இங்கு 'பாங்கு' மாறவில்லை. ஹிந்து, முஸ்லிம் மதங்கள் மாறவில்லை....
மாறியது என் மனம்தான்.

கிருஸ்துவ தேவாலயங்களில் 'உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக.... உன்னதங்களிலே ஓசான்னா.... என்று கோரசாகப் பாடும் போது.....
ஹிந்து ஆலயங்களில் பஜனை கேட்கும் அதே மனநிலை.... ஒரு வித உணர்தல் நிலை இன்றும் எனக்கு...

ஒவ்வொரு மதங்களிலும் சொல்லப்பட்ட அறிவுரைகளும் நல்வழிகளும் அந்தந்தக் கால கட்டங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டவை.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... என்றார் இயேசு நாதர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றார் வள்ளுவர். இன்று நம்மில் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கின்றோம்???.

முஸ்லிம் மதம் உருவானபோது... இறைத்தூதர் நபிகளையும், அவரது ஆதரவாளர்களையும் துன்புறுத்தியவர்கள், எந்த மதத்திலும் இல்லாதவர்கள்.

அன்று அவர்களுக்கு எதிரி அவர்கள் தான். அதை முன்னிறுத்தி குர்ரானில் சில அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. அதை வைத்து குர்ரான் மற்ற மதத்தவரை வெறுக்கின்றது என்று இன்று கூறுவது தவறு.இதோ மேலே படத்தில் உள்ள பூனைக் குட்டி இங்கு எனக்குள்ள நல்ல நண்பர்களில் ஒன்று. எங்களுக்குள் ஆறறிவு, ஐந்தறிவு, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என எந்த ஒரு வேறுபாடும் இல்லை. வளைகுடாவில் இருந்தாலும், நான் இதற்கு, 'மணிக்குட்டி' என்று பெயர் வைத்திருக்கின்றேன்.

எனவே மதங்களைக் குறை சொல்வதை நிறுத்துவோம்.

செய்யும் தொழிலை வைத்து அந்தக் காலத்தில் நாமே உருவாக்கிய ஜாதிகளை ஒழிப்போம்.

சண்டையைத் தவிர்ப்போம்.

மனித நேயத்தை வளர்ப்போம்.தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

கூடுதல் இணைப்பு:
முதலில் காலத்தின் இந்த சிறு கணிப்பைக் கவனித்துப் படியுங்கள்.

கணிதவியலின் விளையாட்டை இப்போது பார்ப்போம்.

கால்பந்து உலகக் கோப்பை என்பது ஏற்கனவே எண்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1. Brazil won the World Cup in 1994; before that they also won in 1970.Adding1970 + 1994= 3964

2. Argentina won its last World Cup in 1986; before that they also won in 1978. Adding 1978 + 1986= 3964

3. Germany won its last World Cup in 1990; before that they also won in 1974. Adding 1974 + 1990= 3964

4. Brazil also won the World Cup in 2002; before that they also won in 1962. Adding 1962+ 2002= 3964

5. Therefore if you want to know what nation is going to win the World Cup in 2010, you only have to subtract 2010 from the magic number that we have determined: 3964.3964 minus 2010 = 1954... In 1954 the World Cup was won by Germany!!!


Probably not scientific... but pretty interesting..

இந்தக்கணிப்பு பொய்த்து விட்டது. இனி ஜெர்மனியில் அக்டோபஸ் கணித்தபடி ஸ்பெயின் கோப்பையை வெல்லுமா என்று பார்ப்போம்.